பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களில் தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு முடிந்தது


சென்னை: பொங்கல் பண்டிகைக்காக சென்னை​யில் இருந்து பல்வேறு நகரங்​களுக்​குச் செல்ல அறிவிக்​கப்​பட்ட 4 சிறப்பு ரயில்​களில் டிக்கெட் முன்​ப​திவு தொடங்கிய சில நிமிடங்​களில் முடிந்து காத்திருப்​போர் பட்டியல் வந்தது. இதனால், பயணிகள் ஏமாற்​றமடைந்​தனர்.

பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்னிட்டு, சென்னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்வேறு நகரங்​களுக்கு தினசரி இயக்​கப்​படும் அனைத்து விரைவு ரயில்​களி​லும் முக்கிய நாட்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​து​விட்​டது. இதையடுத்து, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்​கப்​படும் என பயணிகள் எதிர்​பார்த்தனர்.

இதற்​கிடை​யில், தாம்​பரத்​தில் இருந்து திருநெல்​வேலி, கன்னி​யாகுமரி, ராமநாத​புரத்​துக்கு 3 சிறப்பு ரயில்​களும், சென்னை சென்ட்​ரலில் இருந்து நாகர்​கோ​விலுக்கு ஒரு சிறப்பு ரயிலும் கடந்த 3-ம் தேதி அறிவிக்​கப்​பட்டன. இந்நிலை​யில், இந்த சிறப்பு ரயில்​களுக்கான டிக்​கெட் முன்​ப​திவு ஐஆர்​சிடிசி இணைய தளம் வழியாக​வும், முன்​ப​திவு மையங்​களி​லும் நேற்று காலை 8 மணிக்கு தொடங்​கியது.

சென்னை​யில் இருந்து நாகர்​கோ​விலுக்கு ஜன.12-ம் தேதி புறப்​படும் சிறப்பு ரயில், தாம்​பரத்​தில் இருந்து திருநெல்​வேலி, கன்னி​யாகுமரி, ராமநாத​புரத்​துக்கு ஜன.13-ம் தேதி இயக்​கப்​படும் தலா ஒரு சிறப்பு ரயிலிலும் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி கொண்ட பெட்​டிகளில் டிக்​கெட் முன்​ப​திவு சில நிமிடங்​களில் முடிந்து, காத்​திருப்​போர் பட்டியல் வந்தது. குறிப்​பாக, சென்னை சென்ட்ரல் - நாகர்​கோ​விலுக்கு ஜன.12-ம் தேதி புறப்​படும் சிறப்பு ரயிலில் சில நிமிடங்​களில் டிக்​கெட் முன்​ப​திவு முடிந்​தது. இந்த ரயிலில் மதியம் ஒரு மணி நிலவரப்​படி, காத்​திருப்​போர் பட்டியல் பதிவும் முடிந்து, ‘ரெக்​ரெட்’ என்று வந்தது. இதுபோல, திருநெல்​வேலி - தாம்​பரத்​துக்கு ஜன.19-ம் தேதி இயக்​கப்​படும் சிறப்பு ரயிலில் 2-ம் வகுப்பு தூங்​கும் வசதி பெட்டி​யில் முன்​ப​தி​வும் முடிந்​தது. மற்ற நாட்​களில் போதிய டிக்​கெட்கள் இருந்தன.

சென்னை எழும்​பூர், சென்ட்ரல் உட்பட முக்கிய ரயில் நிலை​யங்​களில் உள்ள முன்​ப​திவு மையங்​களில் சிறப்பு ரயில்​களில் டிக்​கெட் எடுக்க பொது​மக்கள் நீண்​ட நேரம் வரிசை​யில் காத்​திருந்​தனர். ஆனால், முன்​ப​திவு தொடங்கிய சில நிமிடங்​களில் முடிந்​த​தால், டிக்​கெட் கிடைக்​காமல் பெரும்பாலான பயணிகள் ஏ​மாற்​றம் அடைந்​தனர். இதைத்​தொடர்ந்து, கூடு​தல் சிறப்பு ர​யில்களை அறிவிக்க வேண்​டும் என்று கோரியுள்ளனர்.

x