மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான முன்பதிவு இன்று (ஜன. 6) மாலை தொடங்குகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜன. 14-ல் அவனியாபுரம், 15-ல் பாலமேடு, 16-ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டுபணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். 3 போட்டிகளிலும் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாடுபிடி வீரர்கள் www.madurai.nic.in என்ற வலைதளத்தில் தங்களது பெயரை இன்று (ஜன. 6) மாலை 5 முதல் நாளை (ஜன. 7) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று காளைகளின் உரிமையாளர்களும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இதே வலைதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்யப்படும் காளை, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் போட்டிகளில் ஏதாவது ஓரிடத்தில் மட்டுமே களமிறக்க அனுமதி அளிக்கப்படும். மற்ற 2 இடங்களில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.
காளையுடன் உரிமையாளர் ஒருவர், காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஓர் உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்பு தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.