அரசு மருத்துவமனை குறித்து அவதூறு கருத்து: இந்து முன்னணி மாநில செயலாளர் கைது


திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி டவுனை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி பொருத்தியுள்ளனர் என்று, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ‘இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல், இந்துக்களின் ஜனத்தொகையை கருவறுக்கும் செயலாகும்’ என்று பதிவிட்டு இருந்தார்.

இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி மாநகர் மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற குற்றாலநாதனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் ஹைகிரவுண்ட் காவல் நிலையம் அருகில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

x