தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறைக்கு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், பலரும் பேருந்துகளில் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த நிலையில், அதிக கட்டண வசூல் உள்ளிட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்டவற்றை இந்த குழு கண்காணிக்கும் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பஸ்கள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் வரி நிலுவை, அதிக சுமை, அதிக கட்டணம், பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும். இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இருப்பர். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும். இக்குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பஸ்களில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, 'பர்மிட் சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கைகளை எடுப்பர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.