அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கோட்டூர்புரம் லேக் வியூ பகுதியில் உள்ள ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் லேப்டாப், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பி, பட்டா கத்தி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஞானசேகரன் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், அதன் மூலம் சொத்துகள் ஏதேம் வாங்கி இருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடத்துவதற்காக அவரது சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து ஞானசேகரனின் 2 மனைவிகளிடமும் விசாரணை நடத்திய குழுவினர், அவர்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டனர். இந்த சோதனை சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது.
அங்கிருந்த அண்ணா நகர் காவல் துணை ஆணையர் புக்யா சிநேக பிரியாவிடம் , ‘யார் அந்த சார் என்பதற்கு விடை கிடைத்ததா?' என பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ‘எங்களுக்கு காலஅவகாசம் கொடுங்கள்’ என்றார்.
ஏற்கனவே, சென்னை காவல் ஆணையர் அருண் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, ஞானசேகரன் தனது செல்போனை, ‘பிளைட் மோடில்’ வைத்திருந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மாணவி அக்குழுவிடம் ஞானசேகரன் ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியது உண்மைதான் என தெரிவித்துள்ளாராம். இதற்கிடையில், திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
டிஜிபி விளக்கம்: டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் “ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும், ‘சிறப்புப் புலனாய்வுக் குழு, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை ஞானசேகரனிடம் பறிமுதல் செய்துள்ளதாகவும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.
இந்த வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக பொதுவெளியில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. இத்தகையை ஆதாரமற்ற தகவல்கள், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இந்த வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையைப் பாதிக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.