பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் வாய் திறக்காதது ஏன்? - தமிழிசை கேள்வி


சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக இதுவரை முதல்வர், துணை முதல்வர் வாயை திறக்காதது ஏன் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தமிழிசை, மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, ராதிகா, விஜயதாரணி, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தனர்.

பின்னர், வெளியே வந்த தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து, பாஜக பெண் நிர்வாகிகள் பொதுவெளியில் குரல் எழுப்பினால் கைது செய்யப்படுகின்றனர். அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த சம்பவத்தில் இன்னொரு சார் இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் பதிவு செய்துள்ளார். சென்னை காவல் ஆணையர் முதல் நாளில் சொல்லும்போது, சார் என்று யாரும் இல்லை. இவர் தான் குற்றவாளி என்று ஏன் சொன்னார். அந்த சாரை ஏன் மறைக்கிறீர்கள். யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள். எங்களுக்கு தெரிய வேண்டும்.

திமுகவினரால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏன் இன்னும் முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்கவில்லை. ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்தால் முதல்வர் உடனே பேசுவார். தனது மாநிலத்தில் நடந்த பிரச்சினைக்கு ஏன் பேசவில்லை.

விசாரணை சரியாக நடக்காதோ என்று நாங்கள் பயப்படுகிறோம். ஏனெனில் குற்றவாளிகளுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள். சிபிஐ விசாரணை நடைபெற்றால் மட்டுமே பாரபட்ச நிகழ்வுகள் வெளிக்கொணரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை பதிவு: இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப்பதிவில், “பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, அந்த நபர் தனது செல்போனை ஏரோ ப்ளேன் முறையில் வைத்திருந்ததாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார். சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், மாணவி தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடக்கத்தில் இருந்தே வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

x