ஒட்டுமொத்த சமுதாயமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று - மாணவி வன்கொடுமை குறித்து கனிமொழி


அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே அரசியல் செய்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக மாநில மகளிரணி கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்துக்கு ஏற்கெனவே நான் கண்டனத்தை தெரிவித்துள்ளேன். இனிமேல், இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று.

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைப்போல இல்லாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றன. குற்றவாளிகளை பாதுகாக்கக் கூடிய நிலை இப்போது இல்லை. முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியானதற்கு காரணம் அரசு இல்லை, தொழில்நுட்ப கோளாறுதான் என தேசிய தகவல் மையமே விளக்கம் அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது அரசு மீது குற்றஞ்சாட்டுவது அரசியலாக்கும் நடவடிக்கைதான்.

குற்றவாளி யாராக இருந்தாலும் அவரை கைது செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். அந்த வகையில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வழக்கில் நீதிமன்றம் சரியாக தீர்ப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு நியாயமான தண்டனை கிடைத்தால்தான், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைத்ததாக இருக்கும். அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

x