நிகழாண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில், 459 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் அருணா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 459 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சுழற்சி முறையில் 300 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி, சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்க முயன்றனர். இதில், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் சிறந்த காளையின் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா 1 இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது. இதுதவிர காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் பணியில் கந்தர்வக்கோட்டை போலீஸார் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு தொடக்கத்தின்போது விருந்தினர் மாடத்தில் கூடியிருந்த உள்ளூர் மக்களிடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் ஒழுங்குபடுத்தினர்.
இதேபோல, ஆலங்குடி அருகே அரையப்பட்டி ஊராட்சி வன்னியன்விடுதியில் ஜன.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.