மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை தொடக்கம்


மதுரை: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஜல்லிக்கட்டு காளைகள் பயிற்சி விழா ஏற்பாடுகளால் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்கள் களைகட்டியுள்ளது. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை அரசு கால்நடை மருத்துவர்கள், பரிசோதனை செய்து உடல் தகுதி சான்று வழங்கும் பணி தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை 14-ம் தேதி அன்று அவனியாபுரத்தில் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடக்கிறது. இந்த மூன்று கிராமங்களிலும் தற்போது ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் ஒரு புறம் நடக்கும்நிலையில் மற்றொரு புறம் சுற்றுவட்டார கிராமங்களில் காளைகளுக்கு பயிற்சி கொடுத்து போட்டிக்கு தயார்ப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

இந்த போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நிறைய உடல் தகுதி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். அதன்படி, தற்போது இந்த மூன்று ஜல்லக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நேற்று முதல் உடல் தகுதி பரிசோதனை, அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனைகளில் தொடங்கியது. காளைகளை பரிசோதனை செய்த அரசு கால்நடை மருத்துவர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதியாக இருந்தால் அவற்றுக்கு உடல் தகுதிச்சான்று வழங்கி வருகிறார்கள். உடல் தகுதி இல்லாத காளைகளை, நிராகரித்து திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து மதுரை முடுவார் பட்டி கால்நடை அரசு மருத்துவர் மெரில்ராஜ் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் காங்கேயம், புளிக்குளம், உம்பலாச்சேரி போன்ற நாட்டின காளைகளாக இருக்க வேண்டும். அதன் வயது 3 முதல் 8 வரை இருக்க வேண்டும். கொம்பு, வால் போன்றவற்றில் உடைந்து காயங்கள் எதுவும் இருக்ககூடாது. சில காளைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு பரிசோதனைக்கு அழைத்துவரப்படும். அந்த காளைகளை கண்டறிந்து தகுதிச்சான்றுகள் வழங்க மாட்டோம். காளைகளுக்கு உயரம் 120 செ.மீ., அல்லது 4 அடி உயரம் இருக்க வேண்டும்.

மேலும், நோய்கள், பிற குறைபாடுகள் இருக்கிறதா என்பதும் கண்காணிக்கப்படும். உடல் சோர்வு, எடை குறைவு போன்றவை உள்ள காளைகளும் அனுமதிக்கப்படாது. கால்நடை துறையால் வழங்கப்படும் உடல் தகுதிச்சான்றை, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் ஆன்லைனில் பதிவு செய்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ‘டோக்கன்’ பெற்றுக் கொள்ளலாம். உடல் தகுதிச்சான்றும், டோக்கனும் பெற்ற காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும்’’ என்றார்.

x