மாநகராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு: தினகரன் கோரிக்கை


சென்னை: மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராக நடைபெற்ற இணைப்பு நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘சென்னை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட 16 மாநகராட்சிகளையும், திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 40 நகராட்சிகளையும் விரிவாக்கம் செய்திருப்பதோடு, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளையும் உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது.

மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பொதுமக்களிடமும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாமல் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் இணைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்டம், பசுமை வீடு திட்டம், பிரதம மந்திரி கிராமசாலை திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்து வரும் ஊராட்சிகள் தற்போது நகராட்சிகளுடனும், மாநகராட்சிகளுடன் இணைக்கப்படுவதால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இழக்கும் சூழல் உருவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, கிராமப்புற ஊராட்சியாக இருந்து நகர்ப்புற உள்ளாட்சியாக மாறியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களும், சிறு வியாபாரிகளும் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும், வரிகளாலும் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தற்போது இணைக்கப்படும் ஊராட்சிகளுக்கும் அதே பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

எனவே, அவசரகதியில் நடைபெற்றிருக்கும் இணைப்பு நடவடிக்கையை மறுபரிசீலனை செய்வதோடு, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் ஒப்புதலை பெற்ற பின்பே இந்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x