தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா? - முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கேள்வி!


விழுப்புரம்: தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால் கூட, தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் கூட உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது என்று தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியல் செய்ய பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழும் போது அதற்கு எதிராகப் போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நிகழ்வை அரசியலாக்கும் செயலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈடுபடுகிறார். ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது, அரசை எதிர்த்து போராடினாரா?, அப்போது எங்கே சென்றிருந்தார் அவர்.

பாஜக- ஆர்எஸ்எஸுக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக திமுகவுடன் இணைந்து நாங்கள் போராடி வருகிறோம். இந்தியா கூட்டணியில் இணைந்து பயணிக்கிறோம். அதே நேரத்தில் தமிழகத்தில் பட்டா கேட்டு போராடினால், தொழிலாளர்கள் உரிமைக்காக போராடினால் உடனடியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்கின்றனர். நான் முதல்வரை கேட்க விரும்புகிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. எப்படி தமிழகத்தில் காவல்துறை இதுபோல கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது? தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தக்கூடாதா? மக்கள் இயக்கங்கள் நடத்தக்கூடாதா? பாதிக்கப்படும் மனிதன் தன் உரிமைக்காக போராடக்கூடாதா?. ஆர்ப்பாட்டம் நடத்தினால், கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு பேரணிக்கு அனுமதி மறுத்து, கடைசி நேரத்தில் அனுமதி தந்தீர்கள். பின்னர் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறுவது ஏன்?. எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் நடத்துகிற போராட்டங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஏன் அஞ்சுகிறீர்கள்? இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாடல்கள் இருந்தாலும் இடதுசாரிகள் மாடல்தான் சிறந்தது.” என்றார்.

x