புதுவையில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ. 750 ரொக்கம் வங்கிக்கணக்கில் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை அரசு சார்பில் முன்பு ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும், காங்கிரஸ் அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரிசிக்கான பணம் செலுத்தப்பட்டு வந்தது.
கடந்த 2021-ல் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பேற்றவுடன், கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப் பருப்பு, கடலைப் பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. கடந்தாண்டு ரூ.750 தரப்பட்டது.
இதற்கிடையே கடந்த தீபாவளிக்கு மூடப்பட்டிருந்த ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்பட்டது. “இனி மாதந்தோறும் இலவச அரிசியும் விரைவில் தரப்படும்” என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல புதுச்சேரியிலும் வழங்கப்படுமா என்று புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகனிடம் கேட்டதற்கு, " இந்தாண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ. 750 வீதம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.