திருமணத்துக்காக ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல்: உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை: திருச்சி சிறையிலுள்ள ஆயுள் கைதிக்கு திருமணத்துக்காக 15 நாள் அவசர விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெஜினா பேகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் மகன் மார்கித் அலிகான், 2022 முதல் திருச்சி சிறையில் ஆயுள் சிறை கைதியாக உள்ளார். அவருக்கும் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த யாஸ்மின் என்ற பெண்ணுக்கும் ஜன. 15-ல் நாகூர் தர்காவில் திருமணம் நடைபெறுகிறது.

இதற்காக என் மகனுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் 25 நாள் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி மனு அளித்தோம். என் மனுவை நிராகரித்து திருச்சி சரக டிஐஜி 14.9.2024-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து நான் அளித்த 19.6.2024-ல் அளித்த விண்ணப்பத்தை ஏற்று என் மகனுக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் 25 நாள் சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில், மனுதாரர் மகன் 23.4.2022 முதல் சிறையில் உள்ளார். அவர் 2 ஆண்டு 7 மாதமாக சிறையில் உள்ளார். 3 ஆண்டு சிறையில் இல்லாத கைதி சாதாரண விடுப்பு கோர முடியாது. இதனால் மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருமணம் மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தண்டனை கைதிகளுக்கும் திருமணம் செய்ய உரிமையுண்டு. எனவே, மனுதாரர் மகனுக்கு விடுமுறை வழங்க மறுத்து திருச்சி சரக டிஐஜி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர் மகனுக்கு ஜன. 6 முதல் ஜன. 20 வரை 15 நாள் அவசர விடுமுறை வழங்க வேண்டும். மனுதாரர் மகனை ஜன. 5 மாலை 5 மணிக்கு சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். ஜன. 21 காலை 10 மணிக்கு அவரை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். பாதுகாப்புக்கு செல்லும் காவலர்கள் சாதாரண உடையில் இருக்க வேண்டும். பாதுகாப்புக்கான செலவை சிறையில் மனுதாரர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கழித்துக்கொள்ளலாம். மனுதாரரின் மகன் சிறை விதிகளில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

x