பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் வாலிபர் சங்கம்  நூதன போராட்டம்!


புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கயிறு கட்டி வாகனங்களை இழுத்து நூதன போராட்டம் நடந்தது.

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதைத்தொடர்ந்து காமராஜர் சாலை, 45 அடி சாலை சந்திப்பிலிருந்து நேருவீதி, அண்ணாசாலை சந்திப்பு வரை டூவீலர்களை கயிறு கட்டி இழுத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். இதில் கயிறு கட்டி இழுத்தோர் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில தலைவர் கௌசிகன் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில செயலாளர் சஞ்சய் சேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார், மத்திய குழு உறுப்பினர் ஆனந்த் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமில்லாத சாலைகள் மற்றும் போதை ஆசாமிகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்காமலும், சாலையை சரி செய்யாமலும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் என பகல் கொள்ளையை நடத்துகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், பஸ் கட்டண உயர்வையும் அரசு ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தினோம்" என்றனர்.

x