தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்!


தூத்துக்குடி: எதிர்கால சந்ததியினருக்காக தொன்மை வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் பொருநை இலக்கியத் திருவிழா தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று (ஜன.3) காலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார்.

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது, “பொருநை இலக்கிய திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். பொருநை நதி உற்பத்தியாகுவது திருநெல்வேலியாக இருந்தாலும் அது பயணிக்கிற இடமும், கடலோடு கலக்கின்ற இடமும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சி பெறவேண்டும், தமிழ் இலக்கியங்களை நாம் பெருமைப்படுத்த வேண்டும், நம்முடைய பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பழங்கால வாழ்க்கை முறைகளை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இந்த பொருநை இலக்கிய விழாவை ஆண்டுதோறும் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

பொருநை நதிக்கரை நாகரீகத்தை உலகறிய செய்த சிவகளை, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வு களங்கள் நமது மாவட்டத்தில் தான் அமைந்துள்ளன. இங்கு நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த பொருட்கள் நமது தொன்மையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. எனவே, பொருத்தமான இடத்தில் தான் இவ்விழா நடைபெறுகிறது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய திருவிழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் சுமார் 5,800 பேர் 10 விதமான போட்டிகளில் கலந்து கொண்டு இறுதியாக 360 மாணவ, மாணவிகள் பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 136 பள்ளிகளிருந்து சுமார் 860 பள்ளி மாணவ மாணவியர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இப்பொருநை இலக்கிய திருவிழாவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பு நிகழ்வாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த 29.12.2024 முதல் 02.01.2025 வரை நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற சிறுகதை பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களும் இந்த பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கியம் சார்ந்த போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது திறமைகளை, தங்களது பேச்சாற்றலை தங்களது கவிதை திறனை, தங்களது இலக்கிய திறனை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.

பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் சிறப்பு பரிசாக ஒரு கல்லூரிக்கு ரூ.1.5 லட்சம் பரிசுத் தொகையாகவும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மொத்தமாக ரூ.1.80 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். இந்த நிகழ்வானது மாணவர்கள் இடையே இலக்கியத் திறனை மேம்படுத்தவும், இலக்கியத்தோடு அவர்கள் பயணிக்க ஏதுவான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் பிற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்கக்கூடிய நமது தாய் மொழியான தமிழ் மொழியை தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும். நாம் அனைவரும் தமிழர்கள், தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் என்று நாம் பெருமை கொள்ள வேண்டும். என்றைக்குமே நம்முடைய மொழி என்கிற ஒரு உணர்வோடு இருக்க வேண்டும்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் சிறந்த படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போன்றோர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய அனுபவ அறிவுகளை நீங்கள் பெற முடியும். மாணவர்களை சிறந்த படைப்பாளர்களாக, எழுத்தாளர்களாக, இலக்கியவாதிகளாக உருவாக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இது போன்ற வாய்ப்புகளை தமிழக முதல்வர் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். மிகவும் தொன்மைவாய்ந்த மொழி, தமிழ் மொழி என்ற வரலாற்றை ஒரு சிலர் மறைக்க நினைக்கிறார்கள்.

ஆனால், தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்ய தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
உலகப் பொதுமறை நூல் என போற்றப்படும் திருக்குறளை பேரறிவு நூல் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மாணவர்களாகிய நீங்கள் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பு நன்கு பகுத்தாய்வு செய்தால் தான், அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை அறிய முடியம். மாணவர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களின் எதிர்கால சந்ததியினருக்காக, வருங்கால தலைமுறையினர்களுக்காக தொன்மை வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களை அனைவரும் பேணிப் பாதுகாக்க வேண்டும். இலக்கியங்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளதை பின்பற்றி அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். குறிப்பாக பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக, சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும்” இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகங்கள் மற்றும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புத்தகம் மற்றும் நாணயக் கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார். விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி கோட்டாட்சியர் ம.பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) த.சத்யா, முன்னதாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் செ.காமாட்சி மற்றும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் படைப்பு அரங்கம், பண்பாட்டு அரங்கம் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். இன்று (ஜன.4) மாலை நிறைவு விழா நடைபெறுகிறது.

x