சாத்தூர்: சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டியில் தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து, மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். சிவகாசி முருகன் காலனியில் வசித்து வரும் இவரது மகன் முருகன்(41) அப்பயநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டருகே தகர செட் அமைத்து, சிவகாசி முருகன் காலனியைச் சேர்ந்த கார்த்திக்(23), கருப்பசாமி (34), குருமீனா (36), முகேஷ்குமார்(20) ஆகியோருடன் சேர்ந்து சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்து வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த அப்பயநாயக்கன்பட்டி சார்பு ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீஸார், சோதனை செய்த போது, சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து முருகன், கார்த்திக், சூரியகலா, குருமீனா, முகேஷ்குமார் ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பேன்சி ரக பட்டாசுகள், பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கருப்பசாமியை தேடி வருகின்றனர்.