புதுக்கோட்டை: இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடத்துவது வழக்கம். அதன்படி நாளை இந்த ஆண்டின் ஜல்லிக்கட்டு நடக்கிறது. தொடர்ந்து, வாடிவாசல், கேலரி, காளை சேகரிப்பு, தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் விநியோகப் பணியும் இணையதளம் மூலம் நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தை ஆட்சியர் எம்.அருணா ஆய்வு செய்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் மருத்துவ முகாம், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை துறை அலுவலர்கள் தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுக்காக வீரர்களும், காளை வளர்ப்போரும் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.