ஆளுநரை நேரில் சந்தித்தார் சபாநாயகர் அப்பாவு: காரணம் இதுதான்!


சென்னை: சட்டமன்ற கூட்டத்தொடர் வருகின்ற 6ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராஜ்பவனில் ஆளுநர் ஆர்என் ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. எனவே, இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்ற சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்என் ரவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘ “ஜனவரி 6ம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஆளுநர் கடந்த முறை, முதல் பக்கத்தையும், கடைசிப் பக்கத்தையும் மட்டுமே படித்தார். இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்.

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். அதோடு, இது சட்டப் பேரவைக்கும் பொருந்தும். ஆளுநருக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் இந்த அரசு கொடுக்கும்" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.

x