சேலம்: டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக காவிரி பாசனப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது. இதனால் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. எனவே மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து முழு கொள்ளளவான 120 அடியை, இந்த ஆண்டில் 3வது முறையாக கடந்த 31ம் தேதி எட்டியது. இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளால் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று விநாடிக்கு 1,871 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 1,992 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.