காஞ்சிபுரம்: வண்டலூர்-வாலாஜா பாத் சாலை படப்பையில், ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும்; ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத திமுக அரசைக் கண்டித்தும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், படப்பையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வர் ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 44 மாதகால திமுக ஆட்சியில், மக்களுக்குப் பயன் தரும் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல், சுயநலத்தோடு அரசு நிதிகள் பல்வேறு வகைகளில் வீணடிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் தெரிய வருகின்றன.
அதேபோல், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும், பல்வேறு வரிச் சுமைகளை மக்கள் மீது சுமத்தியும், சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், வண்டலூர் - வாலாஜாபாத் சாலை படப்பையில் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், ஏற்கெனவே கடும் வாகனப் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறும் இச்சாலை, மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வண்டலூர் - வாலாஜா பாத் சாலை படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும்; சமீபத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத; கடுமையாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்;
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்காத, குடிநீர் வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாத குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், ஜனவரி 9ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில், படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையிலும்; முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.