அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல் ஆக்குவது ஏன்? என அரசியல் கட்சியினருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து பாமக மகளிரணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அனுமதி மறுத்து சவுமியா அன்புமணி உள்ளி்ட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்பாக அதிமுக, நாம் தமிழர், பாஜக மற்றும் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்களுக்கும் போலீஸார் அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில் பாமக சார்பில் நடத்தப்படவிருந்த போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததையடுத்து, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக பாமக வழக்கறிஞர் கே.பாலு நேற்று முறையீடு செய்தார். அப்போது அவர், ‘‘இந்த போராட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து ஏராளமான மகளிர் அணியினர் சென்னைக்கு வந்துவிட்டனர். போலீஸார் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர். எனவே அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரினார்.
வீட்டில் பாதுகாப்பு உள்ளதா? - அதையேற்க மறுத்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘இந்த விவகாரத்தில் பொது நோக்கத்துடன் போராட்டம் நடத்தாமல் பத்திரிகை விளம்பரத்துக்காகவே அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்காக போராட்டம் நடத்தும் ஒவவொருவரும் முதலில் உங்கள் மனதில் கைவைத்து கூறுங்கள், இந்த சமூகத்தில், உங்கள் குடும்பத்தில் உள்ள, வீட்டில் உள்ள பெண்களுக்கு முழு சுதந்திரத்துடன் கூடிய பாதுகாப்பு உள்ளதா?
பெண்களுக்கான பாதுகாப்பில் உண்மையாக கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியல் ஆக்குவது ஏன்?. மோசமான இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பிரபலப்படுத்துகிறீர்கள்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவத்துக்கு ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிய வேண்டும்.
கண்ணியம் காக்க வேண்டும்: இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து, விசாரணையையும் கண்காணித்து வருகிறது. 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழலில் இந்த விவகாரத்தை தேவையில்லாமல் அரசியலாக்கி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மேலும் வேதனை அளிக்கக்கூடாது. இதன்மூலம் அந்த பெண்ணுக்கு அவமானத்தைத்தான் ஏற்படுத்துகிறீர்கள்.
இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் கண்ணியம் காக்க வேண்டும். ஊடகங்களும் ஊடக விசாரணை மேற்கொள்ளாமல் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆண், பெண் என்ற பாரபட்சம் நிலவும் இந்த சமுதாயத்தில் வாழ்வதையே அவமானமாகக் கருத வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்ற போர்வையில் உண்மையிலேயே பெண்களுக்கான பாதுகாப்பு இன்றளவும் மறுக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திலும் தாயார், தங்கை மற்றும் மனைவியை ஆண்கள் தங்களது முழு கட்டுப்பாட்டில்தான் வைத்துள்ளனர். இந்த மனநிலை மாற்றப்பட வேண்டும். இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்வது வேதனைக்குரியது. இந்த விவகாரம் போராட்டம் நடத்த ஏற்புடையது அல்ல’’ எனக்கூறி போராட்டத்துக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் தலையிட முடியாது என உத்தரவிட்டார்.