அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதானவரையும் தாண்டி சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மலேசியா பினாங்கில் ஜன.4, 5 தேதிகளில் உலகத் தமிழர் வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மலேசியா செல்கிறேன். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அவ்வப்போது நடந்துள்ள சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம்.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை, அதில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் குற்றச் செயல் பெரும் வேதனையை உருவாக்கியிருக்கிறது. பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கை பொருத்தவரை கைது செய்யப்பட்டவரையும் தாண்டி சிலர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே, அரசு, குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கைதானவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே வழக்கு விசாரணையை முடித்து தண்டனை வழங்க வேண்டும். போராட்டங்களுக்கு முற்றாக அனுமதி வழங்கப்படாமல் இல்லை. இதே விவகாரத்தில் பலர் அனுமதி பெற்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனால், இதை வைத்து சிலர் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு அணுகுவதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு போராட அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, வன்னியரசு, கவுதம சன்னா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.