அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறு என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்க முயற்சிப்பதாக பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகள் தத்தெடுக்க உள்ளதாக வெளியான செய்தி தவறானது. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் நான் அவ்வாறு பேசினேனா என்பதை தெரிந்து கொள்ளாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியவில்லை. உறுதிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்ட கட்சிகளுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் எங்கள் பிள்ளைகள். நாங்கள்தான் வளர்த்தெடுக்க வேண்டும். இதை யாருக்கும் தத்துக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது கொள்கைகளை விட்டுக்கொடுத்து மத்திய அரசிடம் நிதி பெறக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசு ஏற்றுள்ளது. மத்திய அரசு நிதி தராமல் இருப்பதை, தமிழக அரசுக்கு விடுக்கும் மிரட்டலாகதான் பார்க்கிறோம். நிதி வராதபட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்களே வளர்த்துக் கொள்கிறோம்.
அதேபோல, ஒரு தகவல் வந்தால் அதில் உண்மைத் தன்மை உள்ளதா என்பதை ஆராயாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து கூறுவது சரியல்ல. கடந்த அதிமுக ஆட்சியில் ஓடாத வாகனமாக இருந்த பள்ளிக்கல்வி துறையை 3 ஆண்டுகளில் வளர்ச்சியை நோக்கி நகர்த்தி வருகிறோம். எனவே, அண்ணாமலை வார்த்தையால் விளையாட கூடாது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்து 25 ஆண்டுகள் முடிவுற்று விழா கொண்டாடப்பட்டுள்ளது. தொடர்ந்து ‘வள்ளுவம் போற்றுதும்’ என்ற நிகழ்ச்சி மூலமாக திருவள்ளுவர் புகழ் பரப்பப்பட உள்ளது. இனிமேல் நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திருக்குறளுக்கு கருணாநிதி எழுதிய உரையுடன் கூட்டத்தை தொடங்குவது என முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.