மதுரை ரயில் நிலையத்தில் தவறவிட்ட ரூ.54 ஆயிரத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்!  


மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் தவறவிட்ட ரூ. 54 ஆயிரம் மற்றும் ஏடிஎம் கார்டுகளை மீட்டு உரியவரிடம் ரயில்வே காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மதுரை ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் நேற்று மதுரை ரயில்வே காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ ஹுமாயூன், தலைமைக்காவலர், காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நடைமேடை பகுதியிலுள்ள இருக்கையில் பர்ஸ் ஒன்றை மீட்டனர். அதில் ரூ. 54,400 பணம் மற்றும் ஆதார், ஏடிஎம் கார்டுகள் இருப்பதும் தெரியவந்தது. உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த போலீஸார், 1வது நடைமேடை பகுதியில் பர்சை தவறவிட்ட நபர் குறித்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் பகுதியைச் சேர்ந்த முஹமதுகான் (43) என்பவருக்கு சொந்தமான பர்ஸ் என்பது தெரிந்தது. நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தபோது, அவர் பர்ஸை தவறவிட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரிடம் ரூ. 54,400 மற்றும் ஆதார், ஏடிஎம் கார்டுகளை காவல்துறையினர் ஒப்படைத்தனர். ரயில்வே காவல்துறையினரின் இந்த நடவடிக்கையை அப்பிரிவு அதிகாரிகள் பாராட்டினர்.

x