மதுரை: ‘ஆண்ட பரம்பரை’ சர்ச்சை விவகாரத்திற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ‘தயவுசெய்து அந்த முழுமையாக பார்த்துவிட்டு அப்புறம் கேள்வி கேளுங்கள். ஒரு தவறான தகவலை எடிட் பண்ணி பரப்புகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம் இது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “தயவு செய்து அந்த கேசட்டை முழுமையாக பார்த்துவிட்டு அப்புறம் கேள்வி கேளுங்கள். ஒரு தவறான தகவலை எடிட் பண்ணி பரப்புகிறார்கள். நான் அமைச்சர், அனைவருக்கும், அனைத்து சமூதாய மக்களுக்கும் பொதுவான நபர். நான் அங்கு பேசியதில், ‘நீங்கள் பின் தங்கியிருக்கிறீர்கள். தற்போது தான் 450 பேர் படித்து தேர்வாகி வந்திருக்கிறீர்கள், நீங்கள் அனைவரும் பதவிக்கு வரும்போது, அனைத்து சமூதாய மக்களையும் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்’ என்று தான் இருக்கிறது.
எனவே அந்தப் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு கேள்வி கேளுங்கள். இதற்கிடையில் வேண்டுமென்றே எடிட் செய்து பரப்பியுள்ளார்கள். நான் ஆண்ட பரம்பரை என்று சொன்னது, ராஜ ராஜ சோழன் காலத்தில் இருந்து சொன்னேன். ஆனால், இவர்கள் தவறாக எடிட் செய்து பரப்புகிறார்கள். அதுவும் இது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், ஏதோ நேற்று நடந்ததுபோல் தற்போது மீடியாக்களில் போடுகிறார்கள்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் மூர்த்தி பேசியதாக வைரலான வீடியோவில் ,"நான் சொல்கிறேன் இது ஆண்ட பரம்பரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாறு பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. வரலாறுகளை எல்லாம் நாட்டு நீங்கள் வெளிப் படுத்த வேண்டும். தற்போது ஒரு வரலாறு உள்ளது. அதாவது ஆங்கிலேயர்களின் படையெடுப்பின்போது கொள்ளையடித்து செல்லப்பட்டபோது, இந்த சமூகத்தினர் தான் எதிர்த்து நின்று போராடினார்கள். அப்போது தான் 5 ஆயிரம் பேர் இறந்தனா்.
உசிலம்பட்டி பக்கத்தில் 16 பேர் சுட்டு கொல்லப்பட்டனா். விவசாயத்தில் முன்னேறி இருந்தபோதும், கல்வியில் பின் தங்கி இருந்ததால் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக நமது சமூகத்தினர் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை உயிர் தியாகம் செய்துள்ளனா். நாம் அனைவரும் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும்’ என்று அமைச்சர் மூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது.