மதுரை: மதுரை மாநகராட்சியுடன் 16 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்பட உள்ளன. மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. மாநகராட்சியை சுற்றியுள்ள பல்வேறு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது.
புதிதாக மதுரை மாநகராட்சியு டன் சேர்க்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாகச் செய்யப்படாமல் உள்ளன. அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகராட்சி எல்லைப் பகுதி மேலும் விரிவாக்கப்பட உள்ளது. மாநகராட்சியைச் சுற்றியுள்ள 16 ஊராட்சிகளையும், பரவை பேரூராட்சியையும் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மதுரை புறநகர் பகுதியில் கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, அரும்பனூர் (பகுதி), கொடிக்குளம் (பகுதி), செட்டிகுளம், கோவில்பாப்பாக்குடி, ஆலாத்தூர், பேச்சிகுளம், விரகனூர், நாகமலை புதுக்கோட்டை, கரடிப்பட்டி, ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், பெருங்குடி ஆகிய 16 ஊராட்சிகள் மற்றும் பரவை பேரூராட்சி என 17 உள்ளாட்சி அமைப்புகள் அமைந்துள்ளன.
இப்பகுதிகள் அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர்வடிகால் கட்டமைப்பிலும் தொடர்ந்து பல்வேறு சவால்கள் ஏற்பட்டு வருகின்றன. இவ்வூராட்சியின் மக்கள்தொகை பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும், ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் மேம்படுத்தப்பட்ட திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மைக்கு ஏதுவாகவும் இந்த 17 உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகின்றன.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் கூறுகையில், ‘மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணைப்பால் மதுரை மாநகராட்சியில் எத்தனை வார்டுகள், மண்டலங்கள் அதிகரிக்கும் என்பது இனிமேல்தான் முடிவு செய்யப்படும்' என்றார்.