திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள் 8 ஆக குறைந்தது - காரணம் என்ன?


திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியுடன் அதனை சுற்றியுள்ள 10 கிராம ஊராட்சிகளை இணைக்க வேண்டிய நிலையில், கடைசி நேரத்தில் அரசியல் அழுத்தம் காரணமாக 2 ஊராட்சிகளை விடுவித்து 8 ஊராட்சிகளை இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 பிப்ரவரி மாதம் அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

அப்போதே திண்டுக்கல் மாநகராட்சியை சுற்றியுள்ள பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, முள்ளிப்பாடி, செட்டிய நாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பள்ளபட்டி, அடியனூத்து, தோட்டனூத்து, பிள்ளையார் நத்தம், பொன்மாந்துறை புதுப் பட்டி ஆகிய 10 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்த 10 ஊராட்சி மன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றி, திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி நகராட்சிகளின் நிர்வாக ஆணையருக்கு அனுப்பப் பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே, திண்டுக்கல் மாநகராட்சி யுடன் 10 ஊராட்சிகளும் இணைந்து எல்லை விரிவாக்கம் நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில், அப்போதைய அதிமுக ஆட்சியாளர்களின் மெத்தனம் காரணமாக எல்லை விரிவாக்கம் நடைபெறவில்லை.

அதற்குள் உள்ளாட்சி தேர்தல் வந்துவிடவே, எல்லை விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் இணையவேண்டிய 10 ஊராட்சி களிலும் தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக் காலம் முடிய 5 ஆண்டுகள் ஆகி விட்டன. எல்லை விரிவாக்கம் இன்றி, திண்டுக்கல் மாநகராட்சியில் இடப் பற்றாக்குறையால் பெரிய அளவிலான எந்த வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளப் படவில்லை. ஆனால் திண்டுக்கல் நகர மக்களின் மீது சென்னை மாநகராட்சிக்கு இணையாக வரிகள் மட்டுமே விதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஒருவழியாக ஐந்து ஆண்டு உள்ளாட்சி களின் பதவிக்காலம் முடிவடைந் ததையடுத்து மீண்டும் இணைப்புக்கான முயற்சிகள் நடைபெற்றன. ஏற்கெனவே, திண்டுக்கல் மாநகராட்சியை சுற்றி 10 ஊராட்சிகளை இணைப்பதற்கான அனைத்து கோப்புகளும் தயார் செய்யப்பட்டு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதிலி ருந்து 2 ஊராட்சிகள் மட்டும் திடீரென விடுவிக்கப்பட்டது திண்டுக்கல் நகர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் அழுத்தமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இணைக்கப்பட வேண்டிய 10 ஊராட்சிகளில், குறிப்பாக ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்நத்தம், பொன்மாந்துறை புதுப்பட்டி ஊராட்சிகள் விடுவிக்கப்பட்டு, தற்போது 8 ஊராட்சிகளை மட்டும் இணைக்க அரசாணை வெளியாகி உள்ளது.

இதன் மூலம் நகர விரிவாக் கத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுபட்ட ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சிக்கு மிக அருகில் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ளதால், நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைப்பது, குப்பை கிடங்கை நகருக்கு வெளியே கொண்டு செல்வது உள்ளிட்ட பல பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கொடைக்கானல் நகராட்சி விரிவாக்கத்தில் அருகிலுள்ள வில்பட்டி ஊராட்சியை முழுமையாக இணைக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், வில்பட்டி ஊராட்சியின் ஒரு பகுதி மட்டுமே தற்போது கொடைக்கானல் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது.

பழநி நகராட்சியுடன் விரிவாக்கப் பகுதியான சிவகிரிப்பட்டி, கலிக்க நாயக்கன் பட்டி ஆகிய ஊராட்சிகளை இணைக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டும் இணைக்கப் படவில்லை. இதனால் ஆன்மிக தலமான பழநி நகர வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளது. கடைசி நேரத்தில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பழநி நகராட்சியுடன் இணையும் நிலையில் இருந்த ஊராட்சிகள் இணைக்கப்படாமல் தவிர்க்கப் பட்டதற்கு அரசியல் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகிறது.

நகராட்சியாகவே மாற்றிவிடலாம்: இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் தனபாலன்(பாஜக) கூறியதாவது: திண்டுக்கல் புதிய பேருந்துநிலையம் கூட பொன்மாந்துறை புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள் என்பதால், இவை இரண்டையும் இணைப்பதை கைவிட்டுள்ளனர்.

இணைத்தால் 10 ஊராட்சிகளையும் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், திண்டுக்கல் மாநகராட்சியை நகராட்சியாக்கி விடலாம். அந்த அளவுக்கு வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது திண்டுக்கல்.

நகருக்கு, மிக அருகே நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள இரண்டு ஊராட்சிகளையும் இணைப்பதை தவிர்ப்பது, நகர வளர்ச்சியில் மேலும் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். பொதுநலத்துடன் சிந்தித்து விடுபட்ட பிள்ளையார்நத்தம், பொன்மாந்துறை புதுப்பட்டி ஆகிய இரண்டு ஊராட்சிகளையும் மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கூறினார்.

x