கோவை: ஒரு நகராட்சி, 4 பேரூராட்சி, 9 ஊராட்சிகள் என 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து கோவை மாநகராட்சியின் எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2006-2011 காலகட்டத்தில் கோவை மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது.
2011-ம் ஆண்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 1 கிராம ஊராட்சி என 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன. 2011-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த 72 வார்டுகள் 60 வார்டுகளாகவும், இணைக்கப்பட்ட பகுதிகள் 40 வார்டுகளாகவும் ஒருங்கிணைக்கப்பட்டு, மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால், மாநகராட்சியின் எல்லைகளை மீண்டும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, கோவை மாநகராட்சி எல்லையையொட்டி 5 கிலோ மீட்டர் சுற்றுக்குள் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்க கடந்தாண்டு மாவட்ட நிர்வாகத்தால் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர், மக்கள் கருத்துகேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர், கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் விவரங்கள் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலூர் ஆகிய 4 பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம் பாளையம், குருடம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், சோமையம்பாளையம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய 9 ஊராட்சிகள் என மொத்தம் 14 உள்ளாட்சி அமைப்புகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட 14 உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தொகை அதிகரிப்பு 244 சதவீதமாகவும், குடியிருப்புகளின் எண்ணிக்கை 231 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப் படுவதால் மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளின் எல்லையும் விரிவடைகின்றன. வார்டுகளின் எண், எல்லைகள் மறுவரையறை செய்த பின்னர், அடுத்தகட்டமாக மாநகராட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கணியூர், அரசூர், பேரூர் செட்டிபாளையம், பட்டணம் ஆகிய 4 ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், சூலூர் பேரூராட்சியுடன், கலங்கல் ஊராட்சி, காங்கயம்பாளையம் ஊராட்சி ஆகியவற்றை இணைத்து நகராட்சியாகவும் தரம் உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச நகராட்சிகளுக்கான வார்டு எண்ணிக்கை மறுநிர்ணயம் செய்யப்பட்டு, வார்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, நகராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.