மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் புதிய வார்டுகள் உருவாக்கம்!  


மதுரை: மதுரை மாநகராட்சியுடன் 16 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சிகள் இணைக்கப்பட உள்ளநிலையில், மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் வார்டுகள், மண்டல அலுவலகங்கள் மறுசீரமைக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ளது. நகரமைப்பு அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், மக்கள் தொகை, வருவாய் மற்றும் எல்லை புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியில் களம் இறங்கி உள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள், 5 மண்டல அலுவலங்கள் உள்ளன. வார்டுகள் எண்ணிக்கை 72-ல் இருந்து 100 ஆக மாறும்போது, வார்டுகளை மறுசீரமைக்கும்போது கடந்த காலத்தில் இருந்த மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் பொதுமக்கள், கள அதிகாரிகளிடம் கருத்துகளை கேட்காமல் அவசர கதியில் வார்டுகளை மறுசீரமைப்பு செய்தனர். அதனால், ஒவ்வொரு வார்டிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் நீள வாக்கில் தனித்தனி தீவுகளாக உள்ளன. குறிப்பிட்ட ஒரு பகுதி தெருக்களை ஒருங்கிணைத்து வார்டுகளை உருவாக்காமல் மனம்போன போக்கில், சம்பந்தமில்லாத பகுதிகளை ஒருங்கிணைத்து வார்டுகள் உருவாக்கப்பட்டன.

அதனால், தற்போது வெற்றிப்பெற்று கவுன்சிலர்களாக இருக்கிற பெரும்பாலானவர்களுக்கு கூட தங்கள் வார்டுகள் எல்லை தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். மக்கள் தொகை, வருவாய் அடிப்படையிலும் கடந்த காலத்தில் வார்டுகள் மறுசீரமைக்கப்படவில்லை. அதனால், தற்போது மாநகராட்சியுடன் கூடுதலாக 15 கிராம ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்பட உள்ள நிலையில் வார்டுகள், மண்டல அலுவலகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் வார்டுகளை மறுசீரமைக்க உள்ளோம். மண்டல அலுவலகங்கள், வார்டுகள் உருவாக்கும்போது அதன் பரப்பளவை கருத்தில் கொள்வதில்லை. வருவாய் இருந்தால்தான் மண்டல அலுவலகங்களை நிர்வாகம் செய்ய முடியும். வருவாய், மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் மண்டல அலுவலகங்களும் உருவாக்கப்பட உள்ளது. தற்போது நிலவரப்படி, கூடுதலாக 2 மண்டல அலுவலகங்கள், 30 முதல் 40 வார்டுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த வார்டுகளை உருவாக்கும்போது மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் மறுசீரமைக்க உள்ளோம். அதனால், கடந்த காலத்தில் வார்டுகளை பிரிக்கும்போது நடந்த தவறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையரகம் என்ன சொல்கிறது, எந்தமாதிரியான வழிகாட்டுதல்களை, புதிய வார்டுகளை தர போகிறார்கள் என்பதை பொறுத்து கூடுதல் வார்டுகள், மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்படும். தற்போது முதற்கட்டமாக நகரமைப்பு அதிகாரிகள், வருவாய்துறை கீழ் இயங்கும் உதவி வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள், ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கள் தொகை, எல்லைகளையும், வருவாயையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதில், மக்கள் தொகை விவரங்களை அந்தந்த பகுதி விஏஓக்கள், ஆர்.ஐக்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் புதிதாக இணைய உள்ள பரவை பேரூராட்சி 8.99 சதுர கி.மீ., பரப்பளவும், மக்கள் தொகை 22,519 பேரும் உள்ளனர். இதுபோல், இணைக்கப்பட உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சிகள் எல்லை, மக்கள் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வருவாய் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு விவரங்களும் முழுமையடைந்த பிறகு, வார்டுகள், மண்டல அலுவலங்கள் பிரிக்கும் பணிதொடங்கும்,'' என்றார்.

x