புதுச்சேரி: ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 2024-25 கல்வியாண்டுக்கான மண்டல அறிவியல் கண்காட்சி ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இந்த கண்காட்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ லட்சுமிகாந்தன், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் மொத்தம் 400 அறிவியல் மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 243 மாதிரிகளையும், தனியார் பள்ளிகள் 157 மாதிரிகளையும் வைத்துள்ளனர். அரசு பள்ளிகளிலிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் 48 மாதிரிகளையும், நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 75 மாதிரிகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 66 மாதிரிகளையும், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 26 மாதிரிகளையும், தனியார் பள்ளிகளிலிருந்து, தொடக்கப்பள்ளி மாணவர்கள் 37 மாதிரிகளையும், நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 41 மாதிரிகளையும், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 44 மாதிரிகளையும், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 27 மாதிரிகளையும் காட்சிக்கு வைத்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் 28 கண்காட்சி மாதிரிகளையும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் 8 கண்காட்சி மாதிரிகளையும் காட்சிக்கு வைத்துள்ளனர். இக்கண்காட்சியில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், டெல்லி தேசிய புத்தக அறக்கட்டளை, அடல் இங்க்யுபேஷன் மையம் (AIC) - புதுச்சேரி பொறியியல் கல்லூரி அறக்கட்டளை, கரிக்கலாம்பாக்கம் முதன்மை சுகாதார மையம், அரபிந்தோ சமூக அமைப்பு, அரபிந்தோ சமூக அமைப்பு (இயந்திரமயம்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புகையிலை விழிப்புணர்வு மற்றும் புதுச்சேரி காவல்துறை (போக்குவரத்து) ஆகிய அரங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை நெட்டப்பாக்கம் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இவ்விழா அறிவியல் ஆர்வத்தை ஊக்குவித்து, மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் ஒரு முக்கிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த கண்காட்சி வரும் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.