பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன்தான்: ராமதாஸ் திட்டவட்டம்


விழுப்புரம்: பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம். அவர் அந்தப் பதவியில் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. அதன் பிறகு அன்புமணி இங்கு வந்தார். அவருடன் பேசினேன், சரியாகிவிட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம். அவர் அந்தப் பதவியில் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழுவில் அறிவித்தபடி, அடுத்த நாளே அவருக்கு நியமனம் கடிதம் கொடுத்துவிட்டேன். பொதுக்குழுவில் நடந்த விவகாரம் பாமகவின் வளர்ச்சியை பாதிக்காது.

பாமக, ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கட்சி சார்பில் நடக்கும், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களின் போது, என்னை விமர்சியுங்கள், என்னுடைய தவறுகளை விமர்சியுங்கள் என்றுதான் கூறுவேன். நேரடியாக என்னை விமர்சிக்க தயங்குபவர்கள், தொலைபேசி வழியாக என்னிடம் பேசுங்கள் அல்லது கடிதம் எழுதுமாறு கேட்டுக் கொள்வேன். இப்போதும் அதைத்தான் கூட்டங்களில் சொல்கிறேன். காரணம் நான் தவறு செய்வதை சுட்டிக்காட்டினால் தான் நான் திருத்திக் கொள்வேன். நான் சொல்வதெல்லாம் சரி தான் என்று கேட்டுச் சென்றால், என் தவறும் தெரியாது நான் திருத்திக்கொள்ளவும் முடியாது” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

x