பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் பதவி விலகுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்


சென்னை: மகளிர் பாதுகாப்புக்காக போராடுபவர்களையும், முதல்வரின் சுவரொட்டி மீது கல் எறிந்ததற்காக வயதான மூதாட்டி ஒருவரையும் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு காட்ட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாதுகாக்க முடியாத திமுக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

மகளிருக்கு பாதுகாப்பு கேட்டு போராடிய பாட்டாளி மகளிர் சங்கத்தினரை கைது செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை. உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்றாகப் போற்றப்படும் அண்ணா பல்கலைக் கழகத்தில் அப்பாவி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் அந்த கொடுங்குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்க முயல்கின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை ஆகும். அந்தக் கடமையை செய்வதற்காகத் தான் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மகளிர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் அனைவரையும் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறது.

போராட்டத் தலமான சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் செல்ல முடியாத அளவுக்கு அனைத்துப் பாதைகளையும் காவல்துறையினர் தடுத்து வைத்திருந்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். போராட்டத்திற்காக வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியை அவரது மகிழுந்தில் இருந்து இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அனைத்து வழிகளிலும் காவல்துறை அதன் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்தை முடக்குவதற்காக வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினரில் ஒரு விழுக்காட்டினரை அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழைவாயில்களில் நிறுத்தியிருந்தாலோ அல்லது இதில் காட்டிய கெடுபிடியில் ஒரு விழுக்காட்டை அண்ணா பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பில் காட்டி இருந்தாலோ திமுகவினரின் அனைத்து வகையான ஆதரவையும் பெற்ற ஞானசேகரன் போன்ற மனித மிருகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அப்பாவி மாணவியை வேட்டையாடியிருக்க முடியாது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு வக்கில்லாத தமிழக அரசு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அதன் வீரத்தை வெளிப்படுத்துகிறது. மகளிர் பாதுகாப்புக்காக போராடுபவர்களையும், முதல்வரின் சுவரொட்டி மீது கல் எறிந்ததற்காக வயதான மூதாட்டி ஒருவரையும் கைது செய்வதில் காட்டும் ஆர்வத்தை பெண்கள் மீதான பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழக அரசு காட்ட வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி விலக வேண்டும்.

தமிழ்நாட்டில் இன்றைய உடனடித் தேவை பெண்களுக்கான பாதுகாப்பு தான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கள்ளக்குறிச்சி திம்மவரத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை, சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுக்கப் பட்டது, சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, அயனாவரத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் என்சிசி முகாமில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை, திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை,

சென்னை பூக்கடை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை கொத்தகம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, மதுரையை சேர்ந்த 13 வயது சிறுமி சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை, தஞ்சாவூர் பாப்பாநாட்டில் 45 வயது பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை, காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவியை 5 பேர் மிரட்டி, கூட்டு பாலியல் வன்கொடுமை என தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது வரை நீதி வழங்கப்படவில்லை.

திமுக அரசால் மாதாமாதம் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையையோ மற்றவற்றையோ தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, தங்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்; அச்சமின்றி நடமாடுவதற்கான உரிமை வேண்டும் என்பது தான் அவர்களின் உரிமைக்குரலாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை அதிக அளவில் திறந்து வைத்தும், கஞ்சா வணிகத்தை ஊக்கு வித்தும், போதைப் பொருட்களை தடுக்காமலும் மகளிருக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களுக்கு உகந்த சூழலை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான குற்றங்களுக்கும் திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு பெண் குழந்தை மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 11.12% அளவுக்கும், பெண்களுக்கு எதிரான ஒட்டுமொத்த குற்றங்களின் எண்ணிக்கை 8.31% அளவுக்கும் அதிகரித்துள்ளன. இதற்காக திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

பெண்கள் பாதுகாப்புக்காக போராடும் மக்கள் மீது அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடுவதைக் கைவிட்டு பெண்களின் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ‘அந்த சார்’ உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்சத் தண்டனைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

x