நாளை ஜனவரி 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் வீடு வீடாக விநியோகிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடியவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதே சமயம் ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ள நிலையில், வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை ஜனவரி 3ம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தொகுப்பு பெறும் நாள், நேரம் இவைகளை குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும்.
இந்த டோக்கன்களில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் மக்கள் குவிவதைத் தடுக்க டோக்கனில் பரிசுத் தொகுப்பு வழங்கும் தேதி, நேரம் ஆகியவைக் குறிப்பிடப்பட்டுள்ளது.