சென்னை: நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விட மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆங்கிலப் புத்தாண்டில் புதிய எழுச்சியுடன் மதிமுக கட்சிப் பணிகளை தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் மண்டல வாரியாக கட்சிக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் மோசமான திட்டமாகும். கூடங்குளத்தில் இன்னும் 2 அணு உலை களைக் கொண்டு வருவோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். அது பெரிய ஆபத்தாகிவிடும். தமிழகத்தை பாஜக குறிவைத்து தாக்குகிறது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறும். கூட் டணியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எந்த விரிசலும் இல்லை. கூட்டணியை மேலும் வலுப்படுத்தி, வெற்றி பெறச் செய்வோம். நடிகர் விஜய் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் எக்காலத்திலும் பாஜகவை வர விடமாட்டேன். இண்டியா கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. மம்தா பானர்ஜிக்கு இல்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அண்ணாமலையின் சாட்டையடிப் போராட்டம் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியின் பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை. வைகோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.