சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான இ.பாலகுரு சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை தேடும் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பான விஷயத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தவிர முழுநேர பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள், நிதி அலுவலர்கள் இல்லை. இதனால் நிர்வாகம் முடங்கி, குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளின் தரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் உரிய நேரத்தில் நடத்தப்படுவதில்லை. மேலும், பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களில் அதிகாரிகளே கையெழுத்துடுவது பட்டம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறி ஆக்கிவிடுகிறது.
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சீராக இருப்பதில்லை. ஒரு வழக்கில் யுஜிசி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி துணைவேந்தர் நியமனமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குச் சில காலம் முன்பு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் யுஜிசி வழிகாட்டு நெறிகளின்படி திருப்திகரமாக இல்லை என்று சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் பதவிநீக்கம் செய்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படியே குறிப்பிட்ட நபர் துணைவேந்தராக நியமிக்கப் பட்டார் எனச் சுட்டிக்காட்டி, நீக்கப்பட்டவரையே மீண்டும் நியமிக்க உத்தரவிட்டது.
தமிழக அரசும் ஆளுநரும் இந்த விஷயத்தில் தங்களது வறட்டு கவுரவத்தை ஒதுக்கிவிட்டு, விரும்பத் தகாத இந்த முட்டுக்கட்டைக்கு இணக்கமான தீர்வு காணவேண்டும். துணை வேந்தர் தேடல் குழுக்கள் பல்கலைக்கழகங்களின் சட்டங்களின்படியே அமைக்கப்படுகின்றன. அதில் யுஜிசி பிரதிநிதியை குழுக்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்கு இடமில்லை.
யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது துணைவேந்தர் நியமனத்தில் பாரபட்சத்தையும் அரசியல் குறுக்கீட்டையும் கட்டுப்படுத்தும் என்பதால் அது வரவேற்கதக்கதுதான். என்றாலும், அதை யாரும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி கல்வி தொடர்பானவை நீங்கலாக யுஜிசி விதிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டியவை அல்ல. யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான பிரிவை பல் கலைக்கழக சட்டங்களில் இடம்பெற செய்வதே இதற்கு தீர்வு.
அதுவரை, தமிழக ஆளுநர் தற்போதைய நடைமுறைகள், மரபுகளை ஏற்பதற்கு இசைய வேண்டும். துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும். அதுவே மாணவர்களின் வேதனையைத் துடைக்கும். உயர் கல்வியின் ஒட்டுமொத்த நலன் கருதி, ஆளுநரும் அமைச்சர்களும் தங்கள் மோதல் போக்கை கைவிட்டு இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.