மேட்டூர்: நடப்பாண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. பின்னர், அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதையடுத்து, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கடந்த ஜூலை 30-ம் தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 43-வது முறையாக எட்டியது. பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்தது. பின்னர், நீர்வரத்து அதிகரித்ததால், நடப்பாண்டில் ஆகஸ்ட் 12-ம் தேதி 2-வது முறையாக மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. பின்னர், மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறப்பு காரணமாகவும் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பாசனத்துக்கு நீர் தேவை குறைந்ததால், நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வந்தது. அணைக்கு நேற்று முன்தினம் 2,331 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,875 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து, மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை நடப்பாண்டில் 3-வது முறையாக நேற்றிரவு எட்டியது.
விவசாயிகள் மகிழ்ச்சி: கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் மேட்டூர் அணை நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்பியுள்ளது. ஒரே ஆண்டில் 3-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியதால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ள நிலையில், அணையில் இருந்து காவிரிடெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அணைப்பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் தயாளகுமார், அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்றுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.