மதுரை: புல்வெளிக் கழுகு முதல் முறையாக மதுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதம் ஒரு ஞாயிறு அன்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக பண்பாட்டுச் சூழல் நடை என்ற பெயரில் மதுரையில் வரலாற்று மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தொடர்ந்து ஆவணம் செய்து வருகிறகள்.
அந்த வகையில் பண்பாட்டுச் சூழல் பயணமாக 22.10.2024 அன்று கள்ளிக்குடியில் காணப்படும் வறல் புல்வெளி பகுதிகளுக்கு சென்று இருந்தனர். மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து குளிர்காலங்களில் இந்தியாவிற்கு வலசை வரும் புல்வெளிக் கழுகு முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் பறவையியலார் மருத்துவர் ஹீமோக்ளோப்ளினால் 22.12.2024 அன்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள வறல்புல்வெளி பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது.
இது குறித்து மருத்துவர் பத்ரி நாராயணன் மற்றும் ஹீமோக்ளோப்ளின் கூறுகையில், புல்வெளிக் கழுகுகள் கிழக்கு ருமேனியாவிலிருந்து தெற்கு உருசியா வரையிலான பகுதிகள் மற்றும் மத்திய ஆசியாவின் புல்வெளிகள் முதல் மங்கோலியா வரையிலான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வசிக்கும் பறவைகள், அவற்றின் குளிர்காலத்தை ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் கழிக்கின்றன. கடந்த சில வருடங்கள் முன் சென்னை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் புல்வெளிக் கழுகு ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க புல்வெளிக் கழுகுகளின் எண்னிக்கை குறைந்து வருகிறது. பன்னாட்டு அழிவையும் அச்சுறுத்தலையும் சந்திக்கும் உயிரினங்களை இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) செம்பட்டியல் வகைப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். புல்வெளிக் கழுகினத்தை அருகி வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதுரையில் மிக அரிதாக காணப்படும் பாம்பாதிரி மரம் ஒன்றும் தாவரவியல் ஆய்வாளர் கார்த்திகேயன் பார்கவிதை அவர்களால் கள்ளிக்குடி பகுதியில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்தாசன் கூறுகையில், வளர்ந்த நாடுகளில் புல்வெளிகளை உயிரிய சூழல் மண்டலமாக கருதும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குஜராத்தில் உள்ள பண்ணி புல்வெளிகளும் ராஜஸ்தான் பகுதியில் உள்ள பாலைவன புல்வெளிகளும் பல்லுயிரிய நோக்கில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. புல்வெளிகளின் பண்பாட்டு பொருளிய மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் குறித்த சிந்தனை போக்குகள் தமிழ்நாட்டில் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வறல் புல்வெளிகள் தரிசு அல்லது பொறம்போக்கு என்றே அரசு ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மறுவரையரை செய்ய வேண்டும். வறல் புல்வெளிகள் மேய்ச்சல் நிலமாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றன. மதுரையில் திருமங்கலம், தோப்பூர், சிவரக்கோட்டை, நேசனேரி, கரடிக்கல், கள்ளிக்குடி, வில்லூர், தென்னமநல்லூர், தே. கல்லுப்பட்டி, பாறைக்குளம், பேரையூர் பகுதிகளில் காணப்படும் வறல் புல்வெளிகள் பல்லுயிரிய பெருக்கமுள்ள பகுதிகளாகும்.
மதுரை மாவட்டத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள வறல் புல்வெளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய நரி, புள்ளிமான், வெருகு, மரநாய், புனுகு பூனை, காட்டு முயல், அலங்கு, உடும்பு, பாம்பு, பல்லி, ஓணான் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் புகழிடமாகவும் புல்வெளிகள் விளங்குகின்றன. பல்லுயிரிய பெருக்கமுள்ள வறல் புல்வெளிகளை மறு ஆய்வு செய்து தகுதி வாய்ந்த புல்வெளி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றார்.