புத்தாண்டு கொண்டாட்டத்தால் மதுரை மல்லி விலை ரூ.2,800 - பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைவு


படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: பனிப்பொழிவால் மதுரையில் பூக்கள் வரத்து குறைவாக உள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தால் மதுரை மல்லிகை ரூ.2,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகைப்பூக்களுக்கு, உள்நாட்டில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. 'கரோனா'வுக்கு முன்பு வரை மல்லிகைப்பூ அதிகளவு மதுரை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டது. 'கரோனா' ஊரடங்கில் பூச்செடிகளை காப்பாற்ற முடியாமல் பெருமளவு தோட்டங்களை விவசாயிகள் அழித்தனர். தற்போது வரை பழைய மல்லிகை பூ சாகுபடி பரப்பை தோட்டக்கலைத்துறையினரால் மீட்டெடுக்க முடியவில்லை. அதனால், முக்கிய விழாக்களில் மட்டுமே விலை உயர்ந்த மல்லிகை பூ, தற்போது சாதாரண முகூர்த்த நாட்கள், விசேஷ நாட்களிலும் விலை அதிகரித்து விற்கிறது.

மேலும் முக்கிய விழா நாட்களில் மல்லிகைப் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ மற்றும் இதர பூக்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. அதனால் பூக்களில் விலை உயர்ந்துள்ளதாகவும், பனிப்பொழிவால் வரத்து குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறுகையில், ''மதுரை மல்லி கிலோ ரூ.2,800, மெட்ராஸ் மல்லி ரூ.1,000, பிச்சி ரூ.1,300, முல்லை ரூ.1,200, செவ்வந்தி ரூ.160, சம்பங்கி ரூ.280, செண்டுமல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.450, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது.'' என்றார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. மேலும் சில்லறை விற்பனை கடைகளிலும் மல்லிகைப்பூ விலை பல மடங்கு உயர்ந்தது.

x