திமுகவின் கையில் அரசியல் சாசனம்; காலடியில் ஜனநாயகம் - கிருஷ்ணசாமி ஆதங்கம்


சென்னை: திமுக அரசு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து விட்டு, வாய்கிழிய ஜனநாயகம் பேசுகிறார்கள் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியல் சாசனம் இயற்றப்பட்டு, 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய மக்களும் தங்களின் வேதப் புத்தகங்களை கையிலே ஏந்துவது போல, இந்தியாவின் அரசியல் கட்சிகள் அரசியல் சாசனத்தையே கையில் ஏந்தி இருந்தனர்.

“நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை” என்பதைப் போல திமுகவும் இந்திய அரசியல் சாசனப் பெருமைகளை மிக, மிக அதிகமாக புகழ்ந்து தள்ளினர். ஆனால் நடைமுறையில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை நடத்தும் ஒவ்வொரு போராட்டத்தையும் காவல்துறையை வைத்து நசுக்க முயல்கிறது.

மாஞ்சோலை மக்களின் மண்ணுரிமையை மீட்கவும்; 3% உள் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இட ஒதுக்கீடு உரிமைகளை மீட்கவும் நவம்பர் 7ம் தேதி ஜனநாயக முறையில் சென்னையில் பேரணிக்கு அனுமதி கேட்டிருந்தும், மறுத்துவிட்டு, காவல்துறையை வைத்து அதைச் சிதைத்தார்கள். அண்ணா பல்கலைக் கழகக் கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமையைக் கண்டிக்கும் வகையில் எந்த எதிர்க்கட்சி போராடினாலும் அதைத் தடுப்பதிலேயே தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது;.

அதிமுகவினர் கைது; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை அவர்கள் கைது; அதைத் தொடர்ந்து பாஜக போராட்டங்களை தடுத்தார்கள்; நேற்று போராடிய விஜய் அவர்களின் தவெக கட்சி நிர்வாகிகளைக் கைது செய்தனர்; இன்று அதே வேகத்தில் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்ற சீமான் அவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள். அதே சமயம் திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டங்களுக்கு காவல்துறை துணை புரிகிறது; மாலை 6 மணிக்கு மேலும் போராட அனுமதி அளிக்கிறது. இது எவ்வித ஜனநாயகம்? இதுபோன்ற அராஜகங்களை இந்திய அரசியல் சாசனம் அங்கீகரிக்கிறதா?

திமுக அரசு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து விட்டு, வாய்கிழிய ஜனநாயகம் பேசுகிறார்கள். கையிலே அரசியல் சாசனம்! திமுகவின் காலடியில் ஜனநாயகமுமாக இருக்கிறது!” என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

x