சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை பாலத் திட்டம் அதிமுக ஆட்சியில் தான் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது என தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நேற்றைய தினம் முதல்வர் கன்னியாகுமரி சென்று கண்ணாடி பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறார். அது அவர் கொண்டு வந்த திட்டமில்லை. அதிமுக ஆட்சியில் நான் முதல்வராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் அது. 2018ல் நிதின் கட்கரி கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், நான் அவரிடம் கோரிக்கை வைத்தேன், அவரும் அதை ஏற்றுக்கொண்டார். சாகர் மாலா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அடுத்து கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா சென்னைக்கு வந்த போது, நான் கோரிக்கை வைத்த மூன்றே நாள்களில் அனுமதி கொடுத்தார். நாங்கள் சுற்றுச்சூழல் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றோம். ஆனால் 2020ல் கரோனா வந்ததனால் பணிகள் தடைப்பட்டுவிட்டன. அதைத்தான் இப்போது திமுக அரசு டெண்டர் விட்டு பணிகளை முடித்திருக்கிறது. எனவே இத்திட்டத்தை கொண்டுவந்தது எங்கள் அரசாங்கம் என்பதை சொல்லிக்கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.