கன்னியாகுமரி: திருவள்ளுவர் வெறும் சிலையல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், திருக்குறள் ஓலைச் சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியீட்டு, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்து உரையாற்றினார்.
அப்போது, ‘முக்கடல் சூழும் குமரி முனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலையினை போற்றக் கூடிய வெள்ளி விழாவை திராவிட ஆட்சியில், நான் நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ் நாளில் என் சிறந்த நாளாக தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமையை நிறைவேற்றியதாக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிலையை திறந்து வைக்கின்ற பொத்தானை அழுத்தக்கூடிய நம்முடைய தலைவர் கருணாநிதி அழுத்திய போது சொன்னார். தன்னுடைய உடல் நடுங்கியதாக சொன்னார்.
ஏனென்றால், அந்தளவுக்கு உணர்ச்சிப் பெருக்கத்தில் அவர் இருந்தார். வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்க வேண்டும் என்பது, அவருடைய நெடுங்கனவு! அந்தக் கனவு நனவான மகிழ்ச்சி, அவருக்கு அந்த உணர்வை தந்தது! இன்றைக்கு இந்தச் சிலையின் வெள்ளி விழாவை நடத்தும்போது, எனக்குள் இருக்கின்ற பெருமை இன்றைக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது! எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பைத் கருணாநிதி உருவாக்கித் தந்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற எண்ணம்தான், இந்தப் பெருமைக்குக் காரணம்!
பொதுவாக, குடும்பங்களில் சாதாரணமாக கேட்பார்கள்…“உன் அப்பா என்ன வைத்துவிட்டு போனார்?” என்று கேட்பார்கள். என்னை கேட்டால், தமிழ்நாடு தொடங்குகின்ற இந்த குமரிமுனையில் வள்ளுவர் சிலையில் தொடங்கி, கருணாநிதி செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் தனிப்பட்ட ஸ்டாலினுக்காக செய்தாரா? இல்லை! அப்போது யாருக்காக செய்தார்? தமிழ்நாட்டுக்கும் – தமிழுக்கும் - தமிழினத்துக்கும் உருவாக்கிக் கொடுத்த சொத்துகள்தான் இதெல்லாம்! என்னைப் பொறுத்தவரையில், அவர் வழியில் இந்த நாட்டுக்கும் - நாட்டு மக்களுக்கும் - தமிழுக்கும் உழைப்பதுதான் என்னுடைய வாழ்நாள் கடமை!
திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்தவேண்டும் என்று நான் சொன்னேன்… உடனே சில அதி மேதாவிகள், ஒரு சிலை அமைப்பதற்கு எதற்கு விழா நடத்தவேண்டும் என்று கேட்க தொடங்கினார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது; ஆனால் உள்ளர்த்தம் உண்டு! அவர்களுக்கு ‘பதிலுக்குப் பதில்’ சொல்ல தேவையில்லை! ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, திருவள்ளுவர், தமிழர்களுக்கு இருக்கக் கூடிய உலக அடையாளம்! திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்! அதனால் கொண்டாடுகிறோம் கொண்டாடுவோம்! கொண்டாடிக் கொண்டே இருப்போம்!
தமிழ்நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிர்த்து உயர்ந்து நிற்கின்ற இந்த வள்ளுவர் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டுக் குறியீடு! திருக்குறளையும், திருவள்ளுவரையும் சொல்லிலும், செயலிலும், நெஞ்சிலும் தூக்கிச் சுமந்த இயக்கம் திராவிட இயக்கம்! சமத்துவத்தை சொல்வதால் தான், தந்தை பெரியார் சொன்னார்… “நம் மதம், குறள் மதம்! நம் நெறி, குறள் நெறி!” என்று சொன்னார். குறள் மாநாடு நடத்தி திருக்குறள் புத்தகத்தை குறைந்த விலைக்கு அச்சிட்டு வழங்கினார்கள். அண்ணா அவர்கள், “குறள் என்பது வகுப்பறையில் மட்டுமல்லாமல், உங்கள் இல்லங்களில், உள்ளங்களில் பரவ வேண்டும்” என்று சொன்னார். நம்முடைய கருணாநிதி அவர்கள், திருக்குறள் தலைவராகவே வாழ்ந்தார்! வலம் வந்தார்!
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடியே, சட்டமன்றத்தில் வாதாடி வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி! போக்குவரத்துத் துறை அமைச்சரானதும், அனைத்து பேருந்துகளையும் திருக்குறளை எழுதினார்! பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்து அரசு விடுதிகளிலும், திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெற வைத்தார்! காவலர் பதக்கத்தில் வள்ளுவரைப் பொறித்தார். தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் ஆண்டை அரசின் சார்பில் ஏற்றுக்கொண்டு அறிவித்தார்.
மயிலாப்பூரில், திருவள்ளுவர் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம் அமைத்தார். குறளோவியம் தீட்டினார். திருக்குறளுக்கு உரை எழுதினார். இப்படி திருக்குறளுக்காகவே வாழ்ந்தார்! இந்தச் சிலையும் சாதாரணமாக அமைக்கப்படவில்லை.இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது… வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்கவேண்டும் என்று 31.12.1975 அன்று அமைச்சரவையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். 1990-ம் ஆண்டு சிலைக்கான பணிகளை தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டது! 1997-ம் ஆண்டுதான் துரிதமாக பணிகள் நடைபெறத் தொடங்கி இந்தச் சிலை அமைக்கப்பட்டது!
கருணாநிதியுடைய கனவுக்கு உரு கொடுத்த மாமனிதர்தான், கணபதி ஸ்தபதி அவர்கள்! அவர்தான் வள்ளுவர் கோட்டத்தையும், பூம்புகார் கோட்டத்தையும், பாஞ்சாலங்குறிச்சி கோட்டையையும் அமைத்தார். அவருடைய அப்பாதான், சென்னையில் இருக்கின்ற காந்தி மண்டபத்தை அமைத்தவர். இந்த கம்பீர வள்ளுவர் சிலைக்கு கருணாநிதி காரணகர்த்தா என்றால், சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி அவர்கள் தான் கலைக்கர்த்தா! இந்தச் சிலையை பற்றி சொல்லவேண்டும் என்றால், திருக்குறளின் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், 133 அடி உயரம்! அதில், அறத்துப்பால் அதிகாரங்களை குறிக்கின்ற வகையில், பீடம் 38 அடி. அறம் என்ற பீடத்தில் பொருளும்-இன்பமுமாக 95 அதிகாரங்கள் சிலையாக இருக்கிறது.
தலைமீது தூக்கி முடிந்திட்ட கொண்டையையே மகுடமாக கொண்டு - இடுப்பில் பட்டாடையையும் - மார்பில் மேல் துண்டும் - வலது கையானது அறம், பொருள், இன்பம் என்பதைக் காட்டும் மூன்று விரல்களாகவும் - இடது கையில் குறள் ஓலைச் சுவடிகளும் இருப்பது போல அமைத்திருக்கிறார் கணபதி ஸ்தபதி அவர்கள். 7000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில், 3,681 கற்கள் இருக்கிறது. இத்தனைக் கற்களைக் கொண்டு ஒரு சிலையை உருவாக்கலாம். ஆனால், அதை ஒரு பாறையில் தூக்கி நிறுத்தி வைத்திருப்பது தான் இந்தச் சிலையின் பெருமை! 133 அடிக்கு சிலை வைக்க, 180 அடிக்கு சாரம் கட்டி இதை அமைத்தார்கள். 500 சிற்பிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கணபதி ஸ்தபதி அவர்கள் சொன்னார்… தஞ்சைப் பேரரசன் ராஜராஜ சோழனிடம் அன்று கண்ட சிற்பக் கலை மரபை இன்று, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களிடத்தில் காண்கிறேன் என்று சொன்னார்.
தஞ்சை பெரிய கோயில் வடிவமைத்த குஞ்சரமல்லனின் வம்சத்தைச் சேர்ந்தவர்தான் கணபதி ஸ்தபதி. சொற்சிற்பியாம் கருணாநிதியும் - கல்சிற்பியாம் கணபதி ஸ்தபதியும் சேர்ந்து உலக வாழ்க்கைச் சிற்பியாம் வள்ளுவருக்காக உருவாக்கிய சிலைக்கு, நாம் வெள்ளி விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த திருக்குறள் விழாவை முன்னிட்டு, சில அறிவிப்புகளையும் நான் வெளியிட விரும்புகிறேன்.
* முக்கடல் சூழும் குமரிமுனையில் இங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சென்றடைய பயனடைவதற்காக படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும்.
* முதல் படகிற்கு தியாகத்தின் உருவாகி, தொண்டின் கருவாகி, தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட காமராசர் பெயரும், இரண்டாம் படகிற்கு தென்குமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி போராடி சாதனைப் படைத்த சாதனையாளர் மார்சல் நேசமணி பெயரும், மூன்றாம் படகிற்கு கனடாவில் பிறந்தாலும், கன்னித்தமிழ் வளர்த்தவரும், திருக்குறளை மொழிப் பெயர்த்தும், தமிழ் இலக்கண நூலை எழுதியும், அழியாப் படைப்புகளை அளித்த ஜி.யு.போப் பெயரும், என மூன்று பெயர்களும் அந்தப் படகுகளுக்கு சூட்டப்படும்.
இரண்டாவது அறிவிப்பு
* ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 'திருக்குறள் திருப்பணிகள்' தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டிற்கு மாவட்டம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு
* ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்படும்.
நான்காவது அறிவிப்பு
* ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு
* தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.
ஆறாவது அறிவிப்பு
* திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இத்துடன் சேர்த்து, குமரிக்கு வந்து இந்த பகுதிக்கான அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியாது? தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்திருப்பது மட்டுமில்லாமல் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருக் கின்ற, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற வகையில், கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். பேரறிஞர் சிலையாக இருக்கக்கூடிய வள்ளுவர் சிலையினை இந்த வெள்ளி விழாவில் நான் மறுபடியும் சொல்கிறேன்.
திருவள்ளுவர் வெறும் சிலையல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும், கேடயமும்! அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளை தடுக்கும். நம்மை மட்டுமல்ல, காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களையும் விரட்டியடிக்கும். தனி மனிதர் முதல் அரசு வரைக்கும் நீதி நெறி சொன்னவர் நம்முடைய வள்ளுவர். நாம் செய்ய வேண்டியது, பள்ளிகளில், கல்லூரிகளில், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் இன்னும் அதிகமாக இடம் பெறச் செய்ய வேண்டும். இது அரசுக்கான உத்தரவு மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும்! சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும்! வாழ்க கலைஞரின் புகழ்! வாழ்க குறளின் புகழ்! அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் திருநாள் வாழ்த்தைச் சொல்லி நான் விடைபெறுகிறேன்’ என்று முதல்வர் தெரிவித்தார்.