சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது. கண்ணியக்குறைவான இவரின் பேச்சு காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளது.
வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர் மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.