சென்னை: அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன் இலவச வேட்டி, சேலைகள் விநியோகிப்பதில் இன்றைக்கு இருக்கின்ற நிலையில் சிரமம். குறைந்த கால அவகாசம் கொடுத்து வேட்டி, சேலைகள் தயாரிப்பதால் அதனுடைய தரமும் கேள்விக்குறியாகிறது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தாண்டு பொங்கலுக்கு தமிழக மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய இலவச வேட்டி மற்றும் சேலைகள் உற்பத்தி முழுமை அடைகின்ற சூழ்நிலை இல்லை. 70% வேட்டிகளும், 50% சேலைகளுமே தகுந்த நேரத்தில் உற்பத்தியாக வாய்ப்பு இருக்கிறது. நெசவாளர்கள் இரவு பகலாக உற்பத்தியை தொடர்ந்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமை அடையும் சூழல் இல்லை.
ஆறு மாத காலத்திற்குள் தயாரிக்க வேண்டிய பொருட்களை மூன்று மாத காலத்திற்குள் தயாரிக்க நிர்பந்தப்படுத்துவது தான் இதற்கான காரணம். அதே சமயத்தில் நெசவுத் தொழிலில் இலாபம் இல்லாத காரணத்தினால் பல நெசவாளர்கள் தறி இயந்திரங்களை விற்று விட்டு வேறு வேலை பார்க்கிறார்கள். அந்த விதத்திலும் உற்பத்தி செய்வதற்கான தொழிலகங்கள் குறைந்து இருப்பதும் உற்பத்தி தாமதமாவதற்கான காரணமாக இருக்கிறது.
கடந்த மே மாதத்திலேயே நூல் வாங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தால் இந்த தாமதத்தை தவிர்த்திருக்க முடியும். தாமதமாக நூற்பாலைகளில் நூல்கள் வாங்கி நெசவாளர்களுக்கு விநியோகித்ததும் தாமதமான உற்பத்திக்கு முக்கிய காரணமாகும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கலுக்கு முன் இலவச வேட்டி, சேலைகள் விநியோகிப்பதில் இன்றைக்கு இருக்கின்ற நிலையில் சிரமம். குறைந்த கால அவகாசம் கொடுத்து வேட்டி, சேலைகள் தயாரிப்பதால் அதனுடைய தரமும் கேள்விக்குறியாகிறது.
மக்களுக்காக பல கோடி செலவு செய்கின்ற அரசு தகுந்த நேரத்தில் முடிவெடுத்து நெசவாளர்களை தயாரிப்பில் ஈடுபடுத்தினால் மட்டும் தான் இதற்கு தீர்வு வரும். இந்தாண்டு விரைவாக இலவச வேட்டி, சேலைகள் விநியோகத்திற்கு துறை அமைச்சரும், அதிகாரிகளும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டால் தான் குறைந்த தாமதத்தில் பொருட்கள் மக்களை சென்றடையும்” என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.