டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 நிதியுதவி: கேஜ்ரிவால் வாக்குறுதி


டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் கோயில் அர்ச்சகர்கள், குருத்வாரா கிரந்திகளுக்கு மாதம் ரூ.18,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 23-ம் தேதி நிறைவடைகிறது. அங்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி சார்பில் அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

டெல்லியில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் புதிதாக 80,000 பேர் சேர்க்கப்படுவர் என்று கடந்த நவம்பர் 21-ம் தேதி ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.

கடந்த 10-ம் தேதி ஆட்டோ ஓட்டுநர்களுக்காக சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி ஆட்டோ ஓட்டுநர்கள் உயிரிழந்தால் தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் காப்பீடு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று கடந்த 12-ம் தேதி ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று கடந்த 18-ம் தேதி அவர் அறிவித்தார்.

இந்த வரிசையில் புதிய அறிவிப்பினை கேஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோயில் அர்ச்சகர்கள் மக்களுக்காக சேவையாற்றுகின்றனர். நமது குடும்பத்தினரின் பிறந்த நாள், உறவினர்களின் உயிரிழப்பு உள்ளிட்ட முக்கிய தருணங்களில் நமக்கும் கடவுளுக்கும் இடையே பாலமாக அவர்கள் செயல்படுகின்றனர்.

அவர்கள் தங்கள் குடும்பத்தினர் மீது அக்கறை செலுத்தாமல் மக்கள் மீது அக்கறை செலுத்துகின்றனர். இந்த நேரத்தில் அர்ச்சகர்கள் மீது நாம் அக்கறை செலுத்த வேண்டும். கோயில் அர்ச்சகர்கள் மற்றும் சீக்கிய குருத்வாராக்களின் கிரந்திகளுக்காக 'பூஜாரி, கிரந்தி சம்மான் யோஜனா' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் அர்ச்சகர்கள், கிரந்திகளுக்கு மாதந்தோறும் ரூ.18,000 உதவித் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இது மிகப்பெரிய பாவம். இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

x