தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், அதன் அருகே பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜனவரி 1 (நாளை) முதல் 5-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 8 செ.மீ., வேளாங்கண்ணியில் 7 செ.மீ., புதுச்சேரி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றத்தில் 5 செமீ, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x