சென்னை: வழக்கு விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு என தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருவதால் குற்றச்செயல்கள் கடந்த ஆட்சியில் இருந்ததை விட குறைந்து வருகின்றன. அது மட்டுமல்லாது வழக்கு விசாரணையை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தரும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.
கடந்த 2022ம் ஆண்டு அக்.13ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீஸ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
2022 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த குற்றச்சம்பவம் நடைபெற்ற உடனே விரைவாக குற்றவாளி சதீஸ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டான். மேலும் முதலமைச்சரின் உத்தரவுப் படி துரிதமாக விசாரணையை மேற்கொண்ட தமிழ்நாட்டின் சிபிசிஐடி போலீசார் 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து குற்றவாளிக்கு எதிரான ஆதரங்களையும் உரிய வகையில் திரட்டி நீதிமன்றத்தின் முன் குற்றவாளியை நிறுத்தினர். சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் நடைபெற்று 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. கொலைக்குற்ற வழக்கில் இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக்கொடுத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு.
ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணையில் இருக்கும் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், இன்னும் எந்த ஒரு முடிவும் தெரியாத சூழலில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றத்திற்கு இரண்டே ஆண்டில் தண்டனை கிடைக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது.. நீதி தாமதம் ஆகாது’ எனத் தெரிவித்துள்ளார்.