கோவை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் 857 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதைக் கண்டித்தும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அம்மன் கே.அர்ச்சுணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பேசும்போது, “தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அண்ணாவின் பெயரால் உள்ள பல்கலைக்கழகத்துக்கு அவமானம் ஏற்படும் வகையில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. அண்ணாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இயக்கம் தான் திமுக. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரவு கொடுத்தார் என திமுகவினர் அவதூறு பரப்பினர். டங்க்ஸ்டனுக்கு அனுமதி அளித்தது திமுக அரசு தான் என்று கூறியபோது ஆதாரம் உள்ளதா என கேட்டனர். தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியதை தான் ஆதாரத்துடன் கொடுத்தவுடன் அமைதியானார்கள்” என்றார்.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு உடை அணிந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல் அனுமதி அளிக்காத நிலையில் 49 பெண்கள் உட்பட 376 பேரை போலீஸார் கைது செய்தனர்.
துடியலூரில் 481 பேர் கைது: கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 62 பெண்கள் உட்பட 481 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 111 பெண்கள் உட்பட மொத்தம் 857 பேரை போலீஸார் கைது செய்தனர்.