மதுரை: தவெக தலைவர் விஜய் எழுதிய கடித நகல்களை மதுரையில் கல்லூரி மாணவிகளிடம் விநியோகித்த அக்கட்சியின் மகளிரணியினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இது தொடர்பாக எழுதிய கடிதம் ஒன்றில், ‘அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் பாலியல் குற்றங்கள் என வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம் எனவும், எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன்’ என்பன போன்ற தகவல்களை பதிவிட்டு எழுதியுள்ளார். இக்கடித நகல்களை பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகளிடம் தவெகவினர் இன்று விநியோகித்தனர்.
இந்நிலையில் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மகளிர் அணி நிர்வாகிகள் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியின் முன்பு நின்று கொண்டு, வகுப்பு முடித்து வெளியே வந்த மாணவிகளிடம் விஜய் படத்துடன் கூடிய கடித நகல்களை வழங்கினர்.
‘விஜய் உங்களுக்காக எழுதிய கடிதம் நம்பிக்கையுடன் இருங்கள், 2026-ல் எல்லாம் மாறும். இக்கடித நகலை படியுங்கள்’ என்றும் மகளிரணியினர் வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற தல்லாகுளம் போலீஸார் அனுமதியின்றி கடித நகல், துண்டு பிரசுரம் விநியோகித்த தவெக மகளிரணியினரை எச்சரித்தனர். இருப்பினும், அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.