கோவில்பட்டி: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் இன்று (டிச.30) அதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்க விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும என பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குற்றத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து இன்று காலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கடம்பூர் செ.ராஜு தலைமை வகித்தார்.
நகர அதிமுக செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, அன்புராஜ், அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், யார் அந்த சார்? என்று கேள்விகள் எழுப்பியும், கோ பேக் ஸ்டாலின் என்றும் கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் தமிழக அரசை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.
தமிழக முதல்வர் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் நடக்கும் அரசு விழாக்களில் பங்கேற்க வந்த நிலையில், அரசுக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் 13 பெண்கள் உட்பட 179 பேரை டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கடம்பூர் ராஜு கூறியதாவது: “சாத்தியக்கூறு இல்லாத வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, 10 வருடங்கள் ஆகியும் கிட்டத்தட்ட 10 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. இதை மறைப்பதற்காக வெற்று விளம்பரங்களை கொண்டு ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த 4 ஆண்டுகளில் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கலால் உள்ளிட்டவைகளில் இருந்து அதிக வருமானம் வருகிறது. ஆனால் 5.30 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளனர்.
அதேபோல் போதைப் பொருள் நடமாட்டத்தால் தமிழக மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்ட ஞானசேகரன் அந்தச் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ படமாக எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில் சார் ஒருவர் பேசுகிறார் என்று வருகிறது. யார் அந்த சார்? என்பது இதுவரை புலப்படவில்லை. மர்மமாக உள்ளது. ஞானசேகரன் கைது செய்யப்பட்ட 5 நாட்கள் ஆகியும் அந்த சார் யார்? என்ற மர்மம் விலகாமல் உள்ளது. இது மேற்குவங்கத்தில் ஒரு மருத்துவருக்கு நடந்த வன்கொடுமையை விட கொடுமையானது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்லாமல் ஊர் ஊராக சுற்றி வருகிறார். இதுபோன்ற சம்பவங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக நாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எங்களுக்கு பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது ஜனநாயக நாடா?. ஸ்டாலின் சர்வாதிகாரியா? என்ற கேள்வி வருகிறது.
யார் அந்த சார்? என்ற கேள்விக்கு பதில் வரும் போது தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்த ஆட்சியே ஆட்டம் காணும் நிலை ஏற்படும். அதற்காகத்தான் இந்த ஆட்சி மூடி மறைக்கிறது. மேலும், முதல் தகவல் அறிக்கையை கசிய விட்டு அந்த மாணவிக்கு இந்த அரசு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவராகி யாரும் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மனசாட்சி மற்றும் மனிதாபிமானம் உள்ளவராக இருந்தால் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தூத்துக்குடியில் நேற்று 2026-ல் ஆட்சியைப் பிடிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். இப்படி சுயநல அரசியல் நடத்துகின்ற மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்ததை கண்டித்து கருப்பு பலூன்கள் பறக்க விட்டு சார் யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளோம். வரும் 6-ம் தேதி கூடும் சட்டமன்றத்தில் இந்த பிரச்சினைக்கு அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற நிலையை நாங்கள் உருவாக்குவோம்,” என்றார்.