கடலூர் - தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்; ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடலூர் சிதம்பரம் குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், தமிழக மாணவ, மாணவியரின் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (டிச.30) காலை 11 மணி அளவில் அதிமுக-வினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சம்பத் தலைமையில் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

இதுபோல சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பாண்டியன் தலைமையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி திராவிட ஜெயம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோல குறிஞ்சிப்பாடியில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற அதிமுகவினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

x